Wednesday, July 9, 2014



                                            பட்வா:: என் சொந்த அனுபவம்
                                            ======   =====================

ஒரு வங்கிக் கிளை முஸ்லிம் நபர்கள் பலருக்குக் கடன் வழங்கி வசூல் செய்து வந்தது. அதன் நிலை சராசரியானதே.  இது வட ஆற்காடு மாவட்டத்தைப் பற்றிய செய்தி ஆகும்.  ஒரு கடன் வசூல் ஆகாததால் அடமானம் வைத்த நிலத்தை விற்க வேண்டி வந்தது; நீதி மன்றம் அறிவிப்பு செய்தது. ஏலம் நடத்தவேண்டிய தினம் ஏலம் கேட்க எவரும் வரவில்லை.  அந்த சொத்து முஸ்லீம்கள் குடியிருப்பிற்கு மத்தியில் அமைந்து இருந்தது; முஸ்லீம்கள் தவிர வேறு யாரும் வாங்க தயாராக இருக்க மாட்டார்கள்; ஆனால் ஓரளவு சரியான விலை கொடுத்து வாங்க முஸ்லீம்கள் முன் வருவர் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எவரும் வரவில்லை.  ஊரில் விசாரித்ததில், உள்ளூர் ஜமாத்தில்  விவாதம் நடந்ததாகவும், எவரும் வாங்க ஏலம் கேட்கக் கூடாது என்று பட்வா வெளியானதாகவும் கேள்வியுற்றோம்.

நான் அப்போது அந்த பிராந்திய அதிகாரி.  அந்த ஊரைச் சேர்ந்த முஸ்லீம் தொழில் அதிபர் ஒருவரை- அவர் ஊரிலும் பெரிய புள்ளி- சந்தித்தேன்.   பட்வா விஷயம் சொன்னேன். அவருக்கு அதிர்ச்சி.  விசாரிக்கிறேன் என்றார்.   மேலும் சொன்னேன்:  "நல்ல விதமாக கடன் கொடுத்து சிறு தொழில்கள், விவசாயம், வீட்டுக் கடன் கொடுத்து வருகிறோம். பலர் இதை நல்ல  விதமாக பயன் படுத்தி வருகின்றனர். ஆனால் கடன் வழங்கும் போது  சொத்து  அடமானம் என்பது போன்றவை வழக்கமான ஒன்று தான்.  ஒரு வேளை  கடன் திரும்பவில்லை என்றால்,  வங்கிக்கு வசூல் நடவடிக்கை எடுக்க இயலும் என்றால் தான் மேலும் கடன் கொடுப்போம்; இவ்வாறு பட்வா விடுத்து எங்கள் பணியில் தலையிட்டால் கடன் கொடுப்பதை நிறுத்தவேண்டிய கட்டாயம் வந்து விடும்.    மேலும் , ரிசர்வ் வங்கிக்கும் எழுதுவேன்;  இதற்கு பல விளைவுகள் ஏற்படலாம்" என்று சொன்னேன். அவர் நான் முடிந்ததை  செய்கிறேன்;கொஞ்சம் அவகாசம் தாருங்கள் என்று சொன்னார்.   நானும்,எங்கள் அலுவல்கள் தொடரும் என்று உறுதி சொன்னேன்.   மூன்று மாதம் கழித்து நீதிமன்றம் மீண்டும் ஏலத்துக்கு நாள் குறித்தது; அப்போது ஏலம் கேட்க நபர்கள் வந்தனர்.  கடனும் அடை பட்டுவிட்டது.

எங்கள் வங்கியின் நல்ல பணியும் அந்த ஊரில்  தொடர்ந்தது;    தொடர்கிறது.


No comments:

Post a Comment